Add parallel Print Page Options

11 அவர்கள் அரசனின் மகனை வெளியே அழைத்து வந்து அவனுக்கு முடிச்சூட்டினார்கள். அவனுக்குச் சட்டப் புத்தகத்தின் ஒரு பிரதியைக் கொடுத்தனர். பிறகு அவர்கள் யோவாசை அரசனாக்கினார்கள். யோய்தாவும் அவனது மகன்களும் அவனுக்கு அபிஷேகம் செய்தனர். அவர்கள், “அரசன் பல்லாண்டு வாழ்க!” என்று வாழ்த்தினார்கள்.

12 ஜனங்கள் ஆலயத்தை நோக்கி ஓடுவதையும் அங்கே அவர்கள் அரசனை வாழ்த்துவதையும் அத்தாலியாள் கேட்டாள். அவளும் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடையே வந்தாள். 13 அவள் அரசனைக் கண்டாள், முன்வாயிலுக்கு முன்னால் உள்ள தூணுக்கருகில் அரசன் நின்றுகொண்டிருந்தான். அதிகாரிகளும் எக்காளம் ஊதுகிறவர்களும் அரசனுக்கருகில் நின்றுகொண்டிருந்தனர். அந்த நாட்டு ஜனங்கள் மகிழ்ச்சியோடு எக்காளம் ஊதினார்கள். பாடகர்களும் இசைக்கருவிகளை இயக்கினார்கள். அவர்கள் ஜனங்களையும் துதித்துப் பாடும்படிச் செய்தனர். அத்தாலியாள் இதனைப் பார்த்து தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, “துரோகம் துரோகம்” என்று கத்தினாள்.

14 யோய்தா ஆசாரியன் படைத்தளபதிகளை அழைத்தான். அவன் அவர்களிடம், “அத்தாலியாளை பிடித்து வெளியே கொண்டுபோங்கள். அவளை யாராவது பின்பற்றினால், அவர்களைக் கொல்ல உங்கள் வாள்களைப் பயன்படுத்துங்கள்” என்றான். அதோடு ஆசாரியர் வீரர்களிடம், “அத்தாலியாளைக் கர்த்தருடைய ஆலயத்தில் கொன்றுவிடாதீர்கள்” என்று எச்சரித்தான். 15 அத்தாலியாள் அரசனின் வீட்டுக் குதிரை வாயிலுக்குள் நுழைய முயன்றபோது வீரர்கள் அவளைப் பிடித்தார்கள். பிறகு அவளை அங்கேயே கொன்றனர்.

16 பிறகு யோய்தா அரசனோடும், அனைத்து ஜனங்களோடும் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டான். அவர்கள் அனைவரும் கர்த்தருடைய ஜனங்கள் என்பதை ஒப்புக்கொண்டனர். 17 ஜனங்கள் அனைவரும் பாகால் ஆலயத்திற்குப்போய் அதை இடித்தனர். அவர்கள் பலிபீடங்களையும், விக்கிரகங்களையும் நொறுக்கினார்கள். பாகாலின் பூசாரியான மாத்தானைப் பலிபீடத்துக்கு முன்பாகவே கொன்றுபோட்டனர்.

18 பிறகு கர்த்தருடைய ஆலயப் பொறுப்புக்கான ஆசாரியர்களை யோய்தா தேர்ந்தெடுத்தான். அவர்கள் லேவியர்களாக இருந்தனர். தாவீதே அவர்களுக்கு கர்த்தருடைய ஆலயப் பொறுப்பினைக் கொடுத்துள்ளார். மோசேயின் சட்டத்தின்படியே அவர்கள் கர்த்தருக்குத் தகனபலிகளைத் தந்தனர். தாவீதின் கட்டளைபடியே அவர்கள் மகிழ்ச்சியோடு பாடியவண்ணம் காணிக்கைகளைத் தந்தனர். 19 யோய்தா கர்த்தருடைய ஆலயத்திலுள்ள அனைத்து வாசல்களிலும் காவலர்களை நியமித்தான். அதனால் சுத்தமில்லாதவர்களும் ஆலயத்திற்குள் நுழையாதபடி செய்தான்.

20 யோய்தா படைத்தளபதிகளையும், பெரியவர்களையும், ஆட்சியாளர்களையும், அந்த நாட்டில் வசித்த அனைவரையும் ஒன்றாய்த் திரட்டினான். பிறகு கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அரசனை வெளியே அழைத்து வந்து உயர்ந்த வாசல்வழியாக அரண்மனைக்கு அழைத்துச்சென்றான். அங்கே அவனைச் சிங்காசனத்தின் மேல் அமரவைத்தனர். 21 யூதாவிலுள்ள ஜனங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருந்தனர். எருசலேம் நகரம் சமாதானமடைந்தது. ஏனென்றால் அத்தாலியாள் வாளால் கொல்லப்பட்டாள்.

Read full chapter