Add parallel Print Page Options

16 ஆனால் உசியா பலமுள்ளவனாக ஆனதும் அவனது தற்பெருமை அவனுக்கு அழிவை விளைவித்தது. அவன் தனது தேவனாகிய கர்த்தருக்கு உண்மையுள்ளவனாக இல்லை. அவன் நறுமணப் பொருட்களை எரிக்கும் பலிபீடத்தின் மீது நறுமணப் பொருட்களை எரிப்பதற்காக கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றான். 17 அசரியா என்ற ஆசாரியனும் கர்த்தருடைய ஆசாரியர்களுள் தைரியமிக்க 80 ஆசாரியர்களும் உசியாவைப் பின்தொடர்ந்து ஆலயத்திற்குள் சென்றனர். 18 அவர்கள் உசியாவின் தவறுகளை எடுத்துச் சொன்னார்கள். அவர்கள் அவனிடம், “உசியாவே, கர்த்தருக்குத் தூபம் காட்டுவது உனது வேலையல்ல. இவ்வாறு செய்வது உனக்கு நல்லதன்று. இந்த ஆசாரியர்கள் பரிசுத்தமான நறுமணப்பொருட்களை எரிப்பதற்குப் பயிற்சிப் பெற்றவர்கள். ஆசாரியர்களும் ஆரோனின் சந்ததியார் மட்டுமே இதனைச் செய்யவேண்டும். மகா பரிசுத்தமான இடத்தை விட்டு வெளியே போ, நீ உண்மையுள்ளவனாக இல்லை. இதற்காக தேவனாகிய கர்த்தர் உம்மை கனம் பண்ணமாட்டார்” என்றனர். 19 இதனால் உசியா கோபம் கொண்டான். அவன் தன் கையில் நறுமணப் பொருட்களை எரிப்பதற்காக ஒரு கலசத்தை வைத்திருந்தான். அத்தோடு அவன் ஆசாரியர்களோடு கோபமாகப் பேசியபோது அவன் நெற்றியில் தொழுநோய் தோன்றியது. இது ஆசாரியர்களுக்கு முன்பாக கர்த்தருடைய ஆலயத்தின் பலிபீடத்தின் அருகில் நறுமணப் பொருட்களை எரிக்கும்போது நடந்தது. 20 தலைமை ஆசாரியனாகிய அசரியாவும் மற்ற ஆசாரியர்களும் இதனைக் கண்டனர். அவர்கள் அவனது நெற்றியில் ஏற்பட்ட தொழுநோயையும் கண்டனர். உடனே உசியாவை ஆலயத்தைவிட்டு வெளியேறும்படி அவர்கள் கூறினார்கள். கர்த்தர் அவனைத் தண்டித்து விட்டதால் அவனும் வேகமாக ஆலயத்தைவிட்டு வெளியேறினான். 21 உசியா எனும் அரசன் தொழுநோயாளியானான். அவனால் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழைய முடியவில்லை. ஒரு தனி வீட்டில் அவன் வசிக்க வேண்டியதாயிற்று. அவனது மகனான யோதாம் அரண்மனையைக் கட்டுப்படுத்தினான். அவனே ஜனங்களின் ஆளுநர் ஆனான்.

Read full chapter