Book of Common Prayer
இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல்
40 கர்த்தரைக் கூப்பிட்டேன், அவர் என்னைக் கேட்டார்.
அவர் என் கூப்பிடுதலைக் கேட்டார்.
2 அழிவின் குழியிலிருந்து கர்த்தர் என்னைத் தூக்கியெடுத்தார்.
சேற்றிலிருந்து என்னைத் தூக்கினார்.
என்னைத் தூக்கியெடுத்துப் பாறையின் மீது வைத்தார்.
என் பாதங்களை உறுதியாக்கினார்.
3 தேவனை வாழ்த்திப் பாடும் புதுப்பாடலை கர்த்தர் என் வாயில் வைத்தார்.
எனக்கு நிகழ்ந்த காரியங்களைப் பலர் காண்பார்கள்.
அவர்கள் தேவனைத் தொழுதுகொள்வார்கள். அவர்கள் கர்த்தரை நம்புவார்கள்.
4 ஒருவன் கர்த்தரை நம்பினால் அவன் உண்மையாகவே மகிழ்ச்சியோடிருப்பான்.
பிசாசுகளிடமும், பொய்த்தெய்வங்களிடமும் உதவி கேட்டு செல்லாத ஒருவன் உண்மையாகவே மகிழ்ச்சியோடிருப்பான்.
5 எனது தேவனாகிய கர்த்தாவே, நீர் அற்புதமான காரியங்கள் பலவற்றைச் செய்திருக்கிறீர்!
எங்களுக்காக அற்புதமான திட்டங்களை வகுத்திருக்கிறீர்!
கர்த்தாவே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை!
நீர் செய்த காரியங்களைக் குறித்து நான் மீண்டும் மீண்டும் கூறுவேன்.
அவை எண்ணிலடங்காதவை.
6 கர்த்தாவே, நீர் இவற்றை எனக்குத் தெளிவாக்கினீர்!
உமக்குப் பலிகளோ, தானியக் காணிக்கைகளோ தேவையில்லை.
உமக்குத் தகன பலிகளோ, பாவப்பரிகார பலிகளோ தேவையில்லை.
7 எனவே நான், “இதோ, நானிருக்கிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும்.
நான் வருகிறேன் புத்தகத்தில் என்னைக் குறித்து இது எழுதப்பட்டிருக்கிறது.
8 என் தேவனே, நீர் விரும்புவதைச் செய்ய நான் விரும்புகிறேன்.
உமது போதனைகளை நான் படித்திருக்கிறேன்.
9 பலர் கூடிய சபையில் உமது நன்மையின் நற்செய்தியை நான் எடுத்துரைப்பேன்.
நான் வாய் மூடி மௌனியாயிருப்பதில்லை.
கர்த்தாவே, நீர் அதை அறிவீர்.
10 கர்த்தாவே, உமது நன்மைகளை நான் கூறுவேன்.
அவற்றை என் இருதயத்தில் மறைத்து வைக்கமாட்டேன்.
கர்த்தாவே, மீட்படைவதற்கு ஜனங்கள் உம்மை நம்பலாமென நான் அவர்களுக்குக் கூறுவேன்.
சபையின் ஜனங்களுக்கு நான் உமது தயவையும் உண்மையையும் மறைக்கமாட்டேன்.
11 கர்த்தாவே, என்னிடமிருந்து உமது இரக்கத்தை மறைக்காதேயும்.
உமது தயவும் உண்மையும் என்னை எப்பொழுதும் பாதுகாக்கட்டும்” என்றேன்.
12 தீயோர் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்.
அவர்கள் எண்ணிக்கைக் கடங்காதவர்கள்.
என் பாவங்கள் என்னைப் பிடித்தன, நான் அவற்றினின்று தப்ப இயலாது.
என் தலைமுடியைக் காட்டிலும் அதிக பாவங்கள் என்னில் உள்ளன.
என் தைரியத்தை இழந்துபோனேன்.
13 கர்த்தாவே, என்னிடம் ஓடி வந்து என்னைக் காப்பாற்றும்!
கர்த்தாவே, விரைந்து வந்து எனக்கு உதவும்.
14 அத்தீயோர் என்னைக் கொல்ல முயலுகிறார்கள்.
கர்த்தாவே, அவர்கள் அவமானமும் ஏமாற்றமும் அடையச் செய்யும்.
அவர்கள் என்னைக் காயப்படுத்த விரும்புகிறார்கள்.
அவர்கள் அவமானத்தால் ஓடிப்போகட்டும்.
15 அத்தீயோர் என்னைக் கேலி செய்கிறார்கள்.
அவர்கள் பேசமுடியாதபடி தடுமாறச் செய்யும்.
16 ஆனால் உம்மை நோக்கிப் பார்க்கும் ஜனங்கள் மகிழ்ச்சி அடையட்டும், அந்த ஜனங்கள் எப்போதும், “கர்த்தரைத் துதிப்போம்” என்று கூறட்டும்.
உம்மால் காப்பாற்றப்பட்டதால் அந்த ஜனங்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
17 ஆண்டவரே, நான் ஏழையும் உதவியற்றவனுமான மனிதன்.
எனக்கு உதவும், என்னைக் காப்பாற்றும்.
என் தேவனே, மிகவும் தாமதியாதேயும்.
இசைக் கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல்களுள் ஒன்று. சீப்பூரார் சவுலிடம் வந்து, “எங்கள் ஜனங்கள் மத்தியில் தாவீது ஒளிந்திருக்கிறார்” எனக் கூறிய காலத்தில் பாடியது.
54 தேவனே, உமது வல்லமையான நாமத்தைப் பயன்படுத்தி என்னைக் காப்பாற்றும்.
உமது வல்லமையை பயன்படுத்தி என்னை விடுதலையாக்கும்.
2 தேவன், என் ஜெபத்தைக்கேளும்.
நான் கூறும் காரியங்களைக் கேளும்.
3 தேவனை தொழுதுகொள்ளாத அந்நியர்கள் எனக்கு எதிராகத் திரும்புகிறார்கள்.
அந்த பலசாலிகள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
4 பாருங்கள், என் தேவன் எனக்கு உதவுவார்.
என் ஆண்டவர் எனக்குத் துணை நிற்பார்.
5 எனக்கு எதிராகத் திரும்பியுள்ள ஜனங்களை என் தேவன் தண்டிப்பார்.
தேவன் எனக்கு உண்மையானவராக இருப்பார்.
அவர் அந்த ஜனங்களை அறவே அழிப்பார்.
6 தேவனே, நான் மனவிருப்பத்தின்படி காணிக்கைகளை உமக்குத் தருவேன்.
கர்த்தாவே, நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
7 என் எல்லாத் தொல்லைகளிலுமிருந்து என்னை விடுவிக்கும்படி நான் உம்மை வேண்டுகிறேன்.
எனது பகைவர்கள் தோற்கடிக்கப்படுவதை நான் பார்க்கட்டும்.
இராகத் தலைவனுக்கு தாவீது எழுதிய பாடல். பத்சேபாளோடு தாவீது செய்த பாவத்திற்குப் பிறகு தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதிடம் சென்ற காலத்தில் இது பாடப்பட்டது.
51 தேவனே உமது மிகுந்த அன்பான தயவினாலும் மிகுந்த இரக்கத்தினாலும் என்னிடம் இரக்கமாயிரும்.
என் பாவங்களை அழித்துவிடும்.
2 தேவனே, எனது குற்றத்தைத் துடைத்துவிடும்.
என் பாவங்களைக் கழுவிவிடும்.
என்னை மீண்டும் தூய்மைப்படுத்தும்!
3 நான் பாவம் செய்தேனென அறிவேன்.
அப்பாவங்களை எப்போதும் நான் காண்கிறேன்.
4 நீர் தவறெனக்கூறும் காரியங்களைச் செய்தேன்.
தேவனே, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்தேன்.
நான் தவறு செய்தவன் என்பதையும், நீர் நியாயமானவர் என்பதையும், ஜனங்கள் அறியும் பொருட்டு இவற்றை அறிக்கையிடுகிறேன்.
உமது முடிவுகள் நியாயமானவை.
5 நான் பாவத்தில் பிறந்தேன்.
என் தாய் என்னைப் பாவத்தில் கருவுற்றாள்.
6 தேவனே! நான் உண்மையும் நேர்மையும் உள்ளவனாக விரும்பினால்
உண்மையான ஞானத்தை என்னுள்ளே வையும்.
7 ஈசோப்பு செடியால் என்னைத் தூய்மையாக்கும்.
பனியைக் காட்டிலும் நான் வெண்மையாகும் வரை என்னைக் கழுவும்!
8 என்னை மகிழ்ச்சியாக்கும். மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கும் வகையைக் கூறும்.
நீர் நொறுக்கின என் எலும்புகள் மீண்டும் மகிழ்ச்சியடையட்டும்.
9 எனது பாவங்களைப் பாராதேயும்!
அவற்றை யெல்லாம் நீக்கிவிடும்
10 தேவனே, எனக்குள் ஒரு பரிசுத்த இருதயத்தைச் சிருஷ்டியும்!
எனது ஆவியை மீண்டும் பலமாக்கும்.
11 என்னைத் தூரத் தள்ளாதேயும்!
என்னிடமிருந்து உமது பரிசுத்த ஆவியை எடுத்துவிடாதேயும்!
12 உமது உதவி என்னை மகிழ்விக்கிறது!
மீண்டும் அந்தச் சந்தோஷத்தை எனக்குக் கொடும்.
எனது ஆவியைப் பலப்படுத்தி உமக்குக் கீழ்ப்படிவதற்குத் தயாராக இருக்கச்செய்யும்.
13 நீர் கூறும் வாழ்க்கை நெறியைப் பாவிகளுக்குப் போதிப்பேன்,
அவர்கள் உம்மிடம் திரும்புவார்கள்.
14 தேவனே, என்னைக் கொலைக் குற்றவாளியாக்காதேயும்.
என் தேவனே, நீரே எனது மீட்பர்.
நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் பாடச் செய்யும்.
15 என் ஆண்டவரே, நான் என் வாயைத் திறந்து உம்மைத் துதித்துப் பாடுவேன்!
16 நீர் பலிகளை விரும்பவில்லை.
நீர் விரும்பாத பலிகளை நான் கொடுக்கத் தேவையில்லை!
17 தேவன் விரும்பும் பலி பணிவான ஆவியே.
தேவனே, உடைந்து நொறுங்கிப்போன இருதயத்தோடு உம்மிடம் வருபவரை நீர் தள்ளிவிடமாட்டீர்.
18 தேவனே, சீயோனிடம் நல்லவராகவும் இரக்கமுடையவராகவும் இரும்.
எருசலேமின் சுவர்களை எழுப்பும்.
19 அப்போது நீர் நல்ல பலிகளையும் தகன பலி முழுவதையும் ஏற்று மகிழமுடியும்.
ஜனங்கள் மீண்டும் உமது பலிபீடத்தில் காளைகளைப் பலியிடுவார்கள்.
22 யோசுவா கிபியோனிய ஜனங்களை அழைத்து, “ஏன் எங்களிடம் பொய் சொன்னீர்கள்? உங்கள் தேசம் எங்கள் முகாமிற்கு அருகில் இருந்தது. ஆனால் நீங்களோ தூர தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றீர்கள். 23 இப்போது, நீங்கள் ஒரு சாபத்தினால் பிடிக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் ஜனங்கள் அனைவரும் அடிமைகள் ஆவர். அவர்கள் தேவனின் ஆலயத்திற்கு விறகு வெட்டவும், தண்ணீர் மொண்டு வரவும் வேண்டும்” என்றான்.
24 கிபியோனிய ஜனங்கள், “நீங்கள் எங்களைக் கொன்றுவிடுவீர்கள் என்ற பயத்தால் நாங்கள் பொய் சொன்னோம். தேவன் தம் ஊழியராகிய மோசேக்கு இந்த தேசத்தையெல்லாம் கொடுப்பதாக வாக்களித்ததாக நாங்கள் கேள்விப்பட்டோம். இத்தேசத்தில் வசிப்போரைக் கொல்லும்படியாக தேவன் உங்களுக்குக் கூறினார். எனவே நாங்கள் உங்களிடம் பொய் கூறினோம். 25 இப்போதும் நாங்கள் உங்கள் பணியாட்கள். நீங்கள் சரியென நினைப்பதை எங்களுக்குச் செய்யலாம்” என்றனர்.
26 எனவே கிபியோனிய ஜனங்கள் அடிமைகளாயினர். ஆனால் யோசுவா அவர்களை உயிரோடுவிட்டான். இஸ்ரவேலர் அவர்களைக் கொல்வதற்கு அனுமதிக்கவில்லை. 27 கிபியோனிய ஜனங்களை இஸ்ரவேல் ஜனங்களுக்கு அடிமைகளாக யோசுவா ஆக்கினான். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் கர்த்தருடைய பலிபீடத்திற்கும் தேவையான விறகு வெட்டி, தண்ணீர் மொண்டு வந்தனர். தேவன் தெரிந்தெடுத்த இடத்தில் எல்லாம் அவர்கள் அவ்வேலைகளைச் செய்தனர். அந்த ஜனங்கள் இன்றைக்கும் அடிமைகளாக உள்ளனர்.
சூரியன் அசையாது நின்ற நாள்
10 அக்காலத்தில் அதோனிசேதேக் எருசலேமின் அரசனாக இருந்தான். யோசுவா ஆயீ நகரைத் தோற்கடித்து முற்றிலும் அழித்துவிட்டான் என்ற செய்தியை அந்த அரசன் அறிந்தான். எரிகோவிற்கும் அதன் அரசனுக்கும் யோசுவா அவ்வாறே செய்தான் என்பதையும் அவன் தெரிந்து கொண்டான். கிபியோனியர் இஸ்ரவேலரோடு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டதையும் அவன் அறிந்திருந்தான். அந்த ஜனங்கள் எருசலேமுக்கு வெகு அருகாமையில் வாழ்ந்தனர். 2 எனவே அதோனிசேதேக்கும் அவன் ஜனங்களும் மிகவும் பயந்தனர். கிபியோன் ஆயீயைப் போன்ற சிறிய நகரமன்று. கிபியோன் ஒரு பெரிய பலமான நாடு. அங்கிருந்த ஆண்கள் அனைவரும் சிறந்த போர் வீரர்களாக இருந்தார்கள். 3 எருசலேமின் அரசனாகிய, அதோனிசேதேக், எபிரோனின் அரசனாகிய, ஓகாமுடனும் யர்மூத்தின் அரசனாகிய பீராமுடனும், லாகீசின் அரசனாகிய யப்பியாவுடனும், எக்லோனின் அரசனாகிய தெபீருடனும் பேச்சு வார்த்தை நடத்தினான். எருசலேமின் அரசன் இவர்களிடம், 4 “என்னோடு வந்து கிபியோனைத் தாக்குவதற்கு உதவுங்கள். யோசுவாவோடும் இஸ்ரவேல் ஜனங்களோடும் கிபியோனியர் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துள்ளனர்!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.
5 இந்த ஐந்து எமோரிய அரசர்களும் படை திரட்டினர். (அவர்கள் எருசலேம், எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகிய நாட்டு மன்னர்கள் ஆவார்கள்.) அப்படைகள் கிபியோனை நோக்கிச் சென்று நகரைச் சூழ்ந்து கொண்டு, போர் செய்ய ஆரம்பித்தன.
6 கிபியோன் நகர ஜனங்கள் கில்காலில் முகாமிட்டுத் தங்கி இருந்த யோசுவாவிற்குச் செய்தியனுப்பினார்கள்: அதில், “நாங்கள் உமது பணியாட்கள்! எங்களைக் கைவிட்டு விடாதீர்கள். வந்து எங்களுக்கு உதவுங்கள்! விரைந்து வாருங்கள், எங்களைக் காப்பாற்றுங்கள்! மலை நாட்டின் எமோரிய அரசர்கள் எல்லோரும் எங்களை எதிர்த்துப் போரிடுவதற்கு அவர்கள் படைகளைக் கொண்டுவந்துள்ளனர்” என்று இருந்தது.
7 எனவே யோசுவா தனது படையோடு கில்காலிலிருந்து புறப்பட்டான். யோசுவாவின் சிறந்த படை வீரர்கள் அவனோடிருந்தனர். 8 கர்த்தர் யோசுவாவிடம், “அப்படைகளைக் கண்டு அஞ்சாதீர்கள். நீங்கள் அவர்களைத் தோற்கடிக்கச் செய்வேன். அப்படைகளில் ஒன்றும் உங்களைத் தோற்கடிக்க இயலாது” என்றார்.
9 யோசுவாவும், அவனது படையும் கிபியோனுக்கு இரவு முழுவதும் அணிவகுத்துச் சென்றனர். யோசுவா வருவதைப் பகைவர்கள் அறியவில்லை. எனவே அவன் திடீரென்று தாக்கியபோது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
10 இஸ்ரவேலர் தாக்கியபோது அவர்கள் மிகுந்த குழப்பமடையும்படியாக கர்த்தர் செய்தார். எனவே இஸ்ரவேலர் அவர்களைத் தோற்கடித்துப் பெரும் வெற்றி பெற்றனர். பெத்தொரோனுக்கு போகிற வழிவரைக்கும் இஸ்ரவேலர் பகைவர்களைக் கிபியோனிலிருந்து துரத்தினர். அசெக்கா, மக்கெதா வரைக்கும் இஸ்ரவேலர் அவர்களைக் கொன்றனர். 11 அப்போது இஸ்ரவேல் படையினர் பகைவர்களை பெத்தொரோனிலிருந்து அசெக்கா வரைக்குமுள்ள வழியில் துரத்தினார்கள். அப்போது, கர்த்தர் வானத்திலிருந்து பெருங்கற்கள் விழும்படியாகச் செய்தார். அப்பெருங்கற்களால் பகைவர்கள் பலர் மரித்தனர். இஸ்ரவேல் வீரர்களின் வாளால் அழிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் கற்களால் கொல்லப்பட்டோரே அதிகம்.
12 கர்த்தர் அன்று இஸ்ரவேலர் எமோரியரை வெற்றிக்கொள்ளச் செய்தார். அந்த நாளில் யோசுவா இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாக நின்று, கர்த்தரை நோக்கி:
“சூரியன், கிபியோனின் மேல் நிற்கட்டும்.
ஆயலோன் பள்ளத்தாக்கின் மேல், சந்திரன் அசையாது நிற்கட்டும்” என்றான்.
13 எனவே சூரியனும், சந்திரனும் இஸ்ரவேலர் தங்கள் பகைவர்களை முறியடிக்கும் வரைக்கும் அசையாமல் நின்றன. இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. வானத்தின் நடுவில் சூரியன் அசையாமல் நின்றது. ஒரு நாள் முழுவதும் அது அசையவேயில்லை. 14 அவ்வாறு முன்னர் நிகழ்ந்ததேயில்லை! அதன் பின் நிகழவுமில்லை. அந்நாளில் கர்த்தர் ஒரு மனிதனின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தார். உண்மையில் கர்த்தரே இஸ்ரவேலருக்காகப் போர் செய்தார்!
15 அதன்பிறகு, யோசுவாவும் அவனது படையினரும் கில்காலில் முகாமிட்டிருந்த இடத்துக்கு திரும்பிப் போனார்கள்.
தன் பணியைப் பற்றிப் பவுல்
14 எனது சகோதர சகோதரிகளே! நீங்கள் நன்மையால் நிறைந்திருப்பதாக நம்புகிறேன். உங்களுக்குத் தேவையான அறிவு உங்களிடம் இருப்பது எனக்குத் தெரியும். நீங்கள் ஒருவருக்கொருவர் கற்பிக்கும் தகுதி பெற்றவர்கள். 15 நீங்கள் நினைவுபடுத்திக்கொள்ளத்தக்க சிலவற்றைப் பற்றி நான் வெளிப்படையாகவே எழுதியிருக்கிறேன். தேவன் எனக்குச் சிறப்பான வரத்தைக் கொடுத்திருப்பதால் நான் இதனைச் செய்தேன். 16 என்னை இயேசு கிறிஸ்துவின் ஊழியனாக தேவன் ஆக்கினார். நான் யூதரல்லாதவர்களுக்கு உதவும்பொருட்டு என்னை தேவன் ஊழியனாக்கினார். நற்செய்தியைக் கற்றுக்கொடுப்பதின் மூலம் தேவனுக்கு சேவை செய்கிறேன். யூதரல்லாதவர்கள் தேவனால் ஏற்றுக்கொள்ளத்தக்க காணிக்கை ஆகும்பொருட்டு நான் இதனைச் செய்கிறேன். அவர்கள் தேவனுக்காகப் பரிசுத்த ஆவியானவரால் பரிசுத்தமாக்கப்பட்டனர்.
17 நான் தேவனுக்காகக் கிறிஸ்துவுக்குள் செய்த பணிகளுக்காகப் பெருமை கொள்கிறேன். 18 நான் செய்து முடித்த செயல்களைப் பற்றி நானே பேசுவதில்லை. யூதரல்லாதவர்கள் தேவனுக்கு அடிபணிய, என் மூலம் கிறிஸ்து செய்த செயல்களைப் பற்றி மட்டுமே பேசுவேன். நான் செய்ததும், சொன்னதுமான காரியங்கள் மூலமே அவர்கள் தேவனுக்குப் பணிந்தனர். 19 அற்புதங்களையும், வல்லமைகளையும். பெருங்காரியங்களையும் பார்த்தும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை உணர்ந்தும் அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்தனர். நான் எருசலேமிலிருந்து கிறிஸ்துவின் நற் செய்தியை அறிவிக்க தொடங்கி, இல்லிரிக்கம் நகர்வரை என் பணியை முடித்திருக்கிறேன். 20 கிறிஸ்துவைப் பற்றிக் கேள்விப்படாத மக்கள் இருக்கும் இடங்களில் நற்செய்தியைப் போதிக்கவே எப்போதும் நான் விரும்புகிறேன். மற்றவர்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட பணிகளை நான் போய்த் தொட விரும்பாததால் நான் இவ்வாறு செய்கிறேன். ஆனால்,
21 “அவரைப் பற்றி கேட்டிராத மக்கள் அவரைப் பார்ப்பார்கள்.
அவரைப் பற்றி அறியாத மக்கள் அவரைப் புரிந்துகொள்வார்கள்.” (A)
என்று ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது.
ரோம் செல்லப் பவுலின் திட்டம்
22 அதனால் தான் உங்களிடம் வருவதிலிருந்து பலமுறை நிறுத்தப்பட்டேன்.
23 நான் இந்தத் திசைகளில் இப்போது எனது பணியை முடித்துவிட்டேன். பல ஆண்டுகளாக உங்களைக் காண விரும்பியிருக்கிறேன். 24 நான் ஸ்பானிய நாட்டிற்குப் போகும்போது உங்களிடம் வந்து உங்களைக் கண்டு கொள்ளவும், நான் உங்களோடு தங்கியிருந்து மகிழ்ச்சி அடைவேனென்றும் நம்புகிறேன். என் பயணத்துக்கு நீங்களும் உதவி செய்யலாம்.
பிலாத்துவின் முன் இயேசு(A)
27 தலைமை ஆசாரியரும் மூத்த யூதத் தலைவர்களும் மறுநாள் அதிகாலையில் இயேசுவைக் கொல்லத் தீர்மானித்தார்கள். 2 அவர்கள் இயேசுவைச் சங்கிலியில் பிணைத்து, ஆளுநர் பிலாத்துவிடம் அழைத்துச் சென்றார்கள். அவர்கள் பிலாத்துவிடம் இயேசுவை ஒப்படைத்தார்கள்.
யூதாஸின் தற்கொலை(B)
3 இயேசுவை எதிரிகளிடம் காட்டிக் கொடுத்த யூதாஸ் அவர்கள் இயேசுவைக் கொல்லத் தீர்மானித்ததைக் கண்டபோது தன் செயலுக்காக மிகவும் வருந்தினான். ஆகவே தனக்குக் கிடைத்த முப்பது வெள்ளிக் காசுகளையும் தலைமை ஆசாரியர்களிடமும் மூத்தத் தலைவர்களிடமும் எடுத்துச் சென்றான். 4 யூதாஸ்,, “நான் பாவம் செய்து விட்டேன். குற்றமற்றவரான இயேசுவை உங்களிடம் கொலை செய்யக் கொடுத்துவிட்டேன்” என்றான்.
அதற்கு யூதத் தலைவர்கள்,, “அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. அது உன்னுடைய பிரச்சனை. எங்களுடையதல்ல” என்றார்கள்.
5 ஆகவே யூதாஸ் பணத்தை தேவாலயத்தில் வீசியெறிந்தான். பின்னர் யூதாஸ் அவ்விடத்தைவிட்டுச் சென்று தூக்கு போட்டுக்கொண்டான்.
6 வெள்ளி நாணயங்களைப் பொறுக்கி எடுத்த தலைமை ஆசாரியர்கள்,, “இப்பணத்தைத் தேவாலயக் கருவூலத்தில் வைத்திருக்க நம் சட்டம் அனுமதிக்காது. ஏனென்றால், இப்பணம் ஒருவனது மரணத்திற்காகக் கொடுக்கப்பட்டது” என்று சொல்லி, 7 அப்பணத்தைக் கொண்டு குயவனின் வயல் என்றழைக்கப்பட்ட நிலத்தை அவர்கள் வாங்கத் தீர்மானித்தார்கள். அந்த நிலம் எருசலேமைக் காண வரும் பயணிகள் இறந்தால் அவர்களை அடக்கம் செய்யப் பயன்படுத்தப்பட்டது. 8 எனவே தான் அந்த நிலம் இன்னமும், “இரத்த நிலம்” என அழைக்கப்படுகிறது. 9 தீர்க்கதரிசி எரேமியா சொன்னபடி இது நடந்தது.
, “அவர்கள் முப்பது வெள்ளி நாணயங்களை எடுத்துக் கொண்டார்கள். அதுவே இஸ்ரவேலர்கள் அவருக்கு (இயேசுவுக்கு) நிர்ணயித்த விலை. 10 கர்த்தர் எனக்கு ஆணையிட்டது போல, அந்த முப்பது வெள்ளி நாணயங்களை குயவனின் வயலை வாங்கப் பயன்படுத்தினார்கள்.” [a]
2008 by World Bible Translation Center