Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 66-67

இராகத் தலைவனுக்கு, ஒரு துதிப்பாடல்.

66 பூமியிலுள்ள அனைத்தும் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும்.
அவரது மகிமைமிக்க நாமத்தைத் துதியுங்கள்!
    துதிப்பாடல்களால் அவரைப் பெருமைப்படுத்துங்கள்!
அவரது வேலைப்பாடுகள் எவ்வளவு அதிசயமானவை என்று தேவனுக்குக் கூறுங்கள்!
    தேவனே, உமது வல்லமை மிகப்பெரியது!
உமது பகைவர்கள் குனிந்து வணங்குவார்கள்.
    அவர்கள் உம்மைக் கண்டு அஞ்சுவார்கள்.
உலகம் முழுவதும் உம்மை தொழுதுகொள்ளட்டும்.
    ஒவ்வொருவரும் உமது நாமத்தை துதித்துப் பாடட்டும்.

தேவன் செய்த காரியங்களைப் பாருங்கள்!
    அக்காரியங்கள் நம்மை வியக்கவைக்கும்.
தேவன் கடலை வறண்ட நிலமாக்கினார்.
    மகிழ்ச்சியுடைய அவரது ஜனங்கள் நதியைக் கடந்து போனார்கள்.
தேவன், அவரது மிகுந்த வல்லமையால் உலகத்தை ஆளுகிறார்.
    எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களை தேவன் கண்ணோக்குகிறார்.
    ஒருவனும் அவரை எதிர்த்துப் போராட முடியாது.

ஜனங்களே, நம் தேவனைத் துதியுங்கள்,
    உரத்த குரலில் துதிப்பாடல்களை அவருக்குப் பாடுங்கள்.
தேவன் நமக்கு உயிரைத் தந்தார்.
    தேவன் நம்மைக் காப்பாற்றுகிறார்.
10 ஜனங்கள் வெள்ளியை நெருப்பிலிட்டுப் பரிசோதிப்பதைப்போல தேவன் நம்மைப் பரிசோதித்தார்.
11 தேவனே, நீர் எங்களைக் கண்ணியில் விழச் செய்தீர்.
    கனமான பாரத்தை நீர் எங்கள் மேல் வைக்கிறீர்.
12 எங்கள் பகைவர்கள் எங்கள்மீது நடக்க நீர் அனுமதித்தீர்.
    நெருப்பின் வழியாகவும் தண்ணீரின் வழியாகவும் நடக்குமாறு எங்களை வழி நடத்தினீர்.
    ஆனால் ஒரு பத்திரமான இடத்திற்கு எங்களை அழைத்து வந்தீர்.
13-14 எனவே நான் உமது ஆலயத்திற்குப் பலிகளைக் கொண்டுவருவேன்.
நான் தொல்லையில் சிக்குண்டபோது உதவிக்காக உம்மைக் கேட்டேன்.
    உமக்குப் பல பொருத்தனைகளைப் பண்ணினேன்.
இப்போது, நான் பொருத்தனைப் பண்ணினதை உமக்குக் கொடுக்கிறேன்.
15     நான் பாவப்பரிகார பலிகளை உமக்குக் கொடுக்கிறேன்.
நான் ஆட்டுக்கடாக்களோடு நறுமணப்பொருட்களைப் புகையிடுவேன்.
    நான் உமக்குக் காளைகளையும் செம்மறி ஆடுகளையும் தருவேன்.
16 தேவனைத் தொழுதுக்கொள்கிற எல்லா ஜனங்களே, வாருங்கள்.
    தேவன் எனக்குச் செய்தவற்றை உங்களுக்குக் கூறுவேன்.
17 நான் அவரிடம் ஜெபித்தேன், நான் அவரைத் துதித்தேன்.
18 என் இருதயம் தூய்மையாயிருந்தது.
    எனவே என் ஆண்டவர் நான் கூறியவற்றைக் கேட்டார்.
19 தேவன் நான் கூறியவற்றைக் கேட்டார்.
    தேவன் என் ஜெபத்தைக் கேட்டார்.
20 தேவனைத் துதியுங்கள்,
    தேவன் என்னிடம் பாராமுகமாக இருக்கவில்லை, அவர் என் ஜெபத்தைக் கேட்டார்.
    தேவன் அவரது அன்பை என்னிடம் காட்டியருளினார்.

இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஒரு துதிப் பாடல்.

67 தேவனே, என்னிடம் இரக்கம் காட்டி என்னை ஆசீர்வதியும்.
    தயவாய் எங்களை ஏற்றுக்கொள்ளும்!

தேவனே, பூமியிலுள்ள ஒவ்வொருவனும் உம்மைக் குறித்துத் தெரிந்துக்கொள்கிறான் என நம்புகிறேன்.
    நீர் எவ்வாறு ஜனங்களை மீட்கிறீரென்று ஒவ்வொரு தேசமும் பார்க்கட்டும்.
தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும்!
    எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும்.
எல்லா தேசங்களும் களிக்கூர்ந்து மகிழட்டும்!
    ஏனெனில் நீர் ஜனங்களைத் தகுதியாக நியாயந்தீர்க்கிறீர்.
    நீர் ஒவ்வொரு தேசத்தையும் அரசாளுகிறீர்.
தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும்.
    எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும்.
தேவனே, எங்கள் தேவனே, எங்களை ஆசீர்வதியும்.
    எங்கள் தேசம் நல்ல அறுவடையை எங்களுக்குக் கொடுக்கட்டும்.
தேவன் நம்மை ஆசீர்வதிக்கட்டும்.
    பூமியிலுள்ள எல்லா மனிதரும் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கட்டும்.

சங்கீதம் 116-117

116 கர்த்தர் எனது ஜெபங்களைக் கேட்பதை
    நான் நேசிக்கிறேன்.
நான் உதவிக்காகக் கூப்பிடும்போது அவர் எனக்குச் செவிகொடுப்பதை
    நான் நேசிக்கிறேன்.
நான் மரித்தவன் போலானேன்!
    மரணக் கயிறுகள் என்னைச் சூழ்ந்துக்கொண்டன, கல்லறை என்னை மூடிற்று.
    நான் அஞ்சிக் கலங்கினேன்.
அப்போது நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிட்டேன்.
    நான்: “கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும்!” என்று கூறினேன்.
கர்த்தர் நல்லவரும், இரக்கம் நிறைந்தவருமாவார்.
    தேவன் தயவுள்ளவர்.
கர்த்தர் திக்கற்ற ஜனங்களைக் கவனித்துக்கொள்கிறார்.
    நான் உதவியற்றவனானேன், கர்த்தர் என்னைக் காப்பாற்றினார்.
என் ஆத்துமாவே, நீ இளைப்பாறு!
    கர்த்தர் உன்னைக் கவனித்துக்கொள்கிறார்.
தேவனே, நீர் என் ஆத்துமாவை மரணத்திலிருந்து காப்பாற்றினீர்.
    நீர் என் கண்ணீரை நிறுத்தினீர்.
    நான் விழாதபடி பார்த்துக்கொண்டீர்.
நான் உயிருள்ளோரின் தேசத்தில்
    தொடர்ந்து கர்த்தருக்குச் சேவைசெய்வேன்.
10 “நான் அழிந்துபோனேன்!”
    என்று கூறியபோதும் நான் தொடர்ந்து நம்பிக்கை வைத்தேன்.
11 நான் பயப்பட்டபோதும்
    “மனிதர்கள் எல்லோரும் பொய்யர்களே!” என்றேன்.
12 நான் கர்த்தருக்கு எதைக் கொடுக்க முடியும்?
    என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கர்த்தரே கொடுத்தார்.
13 அவர் என்னைக் காப்பாற்றினார்.
    எனவே நான் அவருக்கு ஒரு பானங்களின் காணிக்கையை அளிப்பேன்.
    நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவேன்.
14 நான் வாக்குறுதி அளித்தவற்றை கர்த்தருக்குக் கொடுப்பேன்.
    இப்போது அவரது ஜனங்கள் எல்லோருக்கும் முன்பாக நான் போவேன்.
15 கர்த்தரைப் பின்பற்றுபவர்களில் ஒருவனின் மரணம் கர்த்தருக்கு மிக முக்கியமானது!
    கர்த்தாவே, நான் உமது ஊழியர்களில் ஒருவன்!
16 நான் உமது பணியாள்.
    உமது பணிப் பெண் ஒருத்தியின் பிள்ளைகளுள் ஒருவன் நான்.
    கர்த்தாவே, நீரே என்னுடைய முதல் போதகர்.
17 நான் உமக்கு ஒரு நன்றியறிதலின் காணிக்கையைக் கொடுப்பேன்.
    நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவேன்.
18 நான் வாக்குறுதி அளித்தவற்றை கர்த்தருக்குக் கொடுப்பேன்.
    நான் இப்போது அவரது எல்லா ஜனங்களுக்கும் முன்பாகப் போவேன்.
19 நான் எருசலேமின் ஆலயத்திற்குப் போவேன்.

கர்த்தரைத் துதிப்போம்!

117 எல்லா தேசங்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
    ஜனங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்.
தேவன் நம்மை அதிகமாக நேசிக்கிறார்!
    என்றென்றைக்கும் தேவன் நமக்கு உண்மையாக இருப்பார்.

கர்த்தரைத் துதிப்போம்!

1 சாமுவேல் 2:1-10

அன்னாள் நன்றி சொன்னது (அன்னாளின் ஜெபம்)

அன்னாள் ஜெபம் பண்ணி,

“என் இதயம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது!
    நான் என் தேவனுக்குள் மிக்க பலத்துடன் இருப்பதை உணருகிறேன்!
என் எதிரிகளைக் கண்டு நகைக்கிறேன்.
    உமது இரட்சிப்பினாலே நான் மகிழ்ச்சி அடைகிறேன்!
கர்த்தரைப்போல பரிசுத்தமான வேறு தேவன் இல்லை.
    உம்மைத் தவிர வேறு தேவன் இல்லை! நமது தேவனைப் போன்ற ஒரு கன்மலை வேறில்லை.
இனி அகம்பாவத்தோடும் தற்பெருமையோடும் பேசாதிருங்கள்!
    ஏனென்றால் தேவனாகிய கர்த்தர் எல்லாவற்றையும் அறிவார், செய்கைகள் அவராலே நியாயந்தீர்க்கப்படும்.
வலிமையான வீரர்களின் வில்கள் முறிகிறது!
    பலவீனமானவர்கள் பெலன் பெறுகிறார்கள்.
கடந்த காலத்தில் ஏராளமான உணவுப் பொருட்களை வைத்திருந்த ஜனங்கள் இப்போது உணவுக்காகக் கஷ்டப்பட்டு வேலை செய்யவேண்டும்.
    ஆனால் கடந்த காலத்தில் பசியோடு இருந்தவர்கள், எல்லாம் இனிமேல் பசியாயிரார்கள்.
முன்பு குழந்தை பேறு இல்லாமல் இருந்த பெண் இப்போது ஏழு குழந்தைகளைப் பெற்றிருக்கிறாள்!
    ஆனால் முன்பு நிறைய குழந்தைகளைப் பெற்ற பெண் அக்குழந்தைகள் தம்மை விட்டு விலகியதால் வருத்தமாயிருக்கிறாள்.
கர்த்தர் மரணத்தைக் கொண்டு வருகிறவராகவும் வாழ வைக்கிறவராகவும் இருக்கின்றார்.
    அவரே பாதாளத்தில் இறங்கவும், அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.
கர்த்தர் சிலரை ஏழையாக்குகிறார், அவரே இன்னும் சிலரைச் செல்வந்தராக்குகிறார்.
    கர்த்தர் சிலரைத் தாழ்த்துகிறார், மற்றவர்களை மேன்மையாக்குகிறார்.
கர்த்தர் ஏழை ஜனங்களை புழுதியிலிருந்து உயிர்ப்பிக்கிறார் மற்றும் அவர்களை குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
    கர்த்தர் ஏழை ஜனங்களை முக்கியமானவர்களாக்குகிறார்.
அவர்களை அவர் இளவரசர்களோடும் மதிப்புக்குரிய விருந்தினர்களோடும் அமர வைக்கிறார்.
    கர்த்தர் உலகம் முழுவதையும் படைத்தார்!
    இந்த முழு உலகமும் அவருக்குரியது!
கர்த்தர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைப் பாதுகாக்கிறார்.
    அவர்களை அழிவினின்றும் காப்பார்.
ஆனால் தீயவர்கள் இருளிலே அமைதியாவார்கள்.
    அவர்களின் பெலன் அவர்களை வெற்றியடையச் செய்யாது.
10 கர்த்தரை எதிர்ப்பவர்கள் சிதறடிக்கப்படுவார்கள்.
    உன்னதமான தேவன் பரலோகத்திலிருந்த தமது எதிரிகளுக்கு எதிராக இடியாய் முழங்குவார்.
கர்த்தர் பூமியின் கடைசி பகுதியையும் நீயாயந்தீர்ப்பார்.
    அவர் தமது அரசனுக்கு வல்லமையை அளிப்பார்.
தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார்” என்றாள்.

தீத்து 2:1-10

உண்மையான போதனையைப் பின்பற்றுதல்

பின்பற்ற வேண்டிய உண்மையான போதனையை நீ மக்களுக்குக் கூற வேண்டும். முதியவர்கள் சுயக் கட்டுப்பாடும், கௌரவமும் ஞானமும் உடையவர்களாக இருக்கப் போதனை செய். அவர்கள் விசுவாசத்திலும் அன்பிலும், பொறுமையிலும் உறுதி உடையவர்களாக இருக்க வேண்டும்.

மற்றும் வாழும் முறையில் பரிசுத்தமாய் இருக்கும் பொருட்டு முதிய பெண்களிடம் போதனை செய். மற்றவர்களை எதிர்த்து எதையும் பேசவேண்டாம் என்றும், குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆகவேண்டாம் என்றும் சொல். அப்பெண்கள் நல்லதைப் போதிக்கவேண்டும். அவ்வழியில், அவர்கள் இளம் பெண்களுக்குக் கணவன்மீதும் பிள்ளைகள் மீதும் அன்புகொள்ளுமாறு அறிவுறுத்த முடியும். அவர்களுக்கு ஞானத்தோடும், பரிசுத்தத்தோடும் இருக்கும்படியும், வீட்டைப் பராமரித்தல், கருணை, கணவனுக்குக் கீழ்ப்படிதல் போன்றவற்றையும் அவர்கள் கற்பிக்க முடியும். பிறகு தேவன் நமக்குத் தந்த போதனைகளைப் பற்றி எவரும் விமர்சிக்க முடியாது.

அந்தப்படியே இளைஞர்களையும் ஞானமாயிருக்கும்படிக் கூறு. இளைஞர்களுக்கு முன்மாதிரியாக ஒவ்வொரு விதத்திலும் நல்ல செயல்களைச் செய்யவேண்டும். நேர்மையோடும் அக்கறையோடும் உன் போதனைகள் இருக்க வேண்டும். பேசும்போது உண்மையையே பேசு. அதனால் எவரும் உன்னை விமர்சிக்க முடியாது. நமக்கு எதிராக எதையும் தவறாகச் சொல்ல முடியாத நிலையில் நம்மை எதிர்த்துப் பேச வரும் ஒவ்வொருவரும் வெட்கப்படுவர்.

அடிமைகளுக்கும் அறிவுரை கூறு. அவர்கள் எப்பொழுதும் தங்கள் எஜமானர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும். அவர்கள் தங்கள் எஜமானர்களுக்கு விருப்பமானதையே செய்ய வேண்டும். அவர்கள் எதிர்வாதம் செய்யக்கூடாது. 10 அவர்கள் எஜமானர்களுக்கு உரியதைத் திருடக்கூடாது. அவர்கள் தம் நடத்தையின் மூலம் முழுக்க முழுக்க தாங்கள் நம்பிக்கைக்குத் தகுதியானவர்கள் என்பதைக் காட்டவேண்டும். நமது இரட்சகராகிய தேவனுடைய போதனைகள் நல்லவை எனப் புலப்படும்படி அவர்கள் இப்படி நடந்துகொள்ள வேண்டும்.

லூக்கா 1:26-38

கன்னி மரியாள்

26-27 எலிசபெத் கருவுற்ற ஆறாம் மாதத்தில் தேவன் காபிரியேல் என்னும் தூதனை கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் பட்டணத்தில் வாழ்ந்த ஒரு கன்னிப் பெண்ணிடம் அனுப்பினார். தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்த யோசேப்பு என்ற மனிதனை மணம் புரிவதற்கு அவள் நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அவள் பெயர் மரியாள். 28 தூதன் அவளிடம் வந்து, “கர்த்தர் உன்னோடிருக்கிறார். அவர் உன்னை ஆசீர்வதிக்க விரும்புகிறார்” என்றான்.

29 தூதன் கூறியவற்றைக் கேட்டு மரியாள் மிகவும் குழப்பம் அடைந்தாள். “இதன் பொருள் என்ன?” என்று மரியாள் அதிசயித்தாள்.

30 தூதன் அவளிடம், “பயப்படாதே மரியாளே. தேவன், உன்னிடம் பிரியமாயிருக்கிறார். 31 கவனி! நீ கருவுறுவாய். ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பாய். அக்குழந்தைக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. 32 அவர் பெரியவராக இருப்பார். மகா உன்னதமான தேவனுடைய குமாரன் என்று மக்கள் அவரை அழைப்பர். அவரது முன்னோராகிய தாவீதின் அதிகாரத்தை கர்த்தராகிய தேவன் அவருக்குக் கொடுப்பார். 33 சதாகாலமும் யாக்கோபின் மக்கள்மீது இயேசு அரசாளுவார். இயேசுவின் ஆட்சி ஒருபோதும் முடிவுறுவதில்லை” என்றான்.

34 மரியாள் தூதனை நோக்கி, “இது எப்படி நடக்கும்? எனக்குத் திருமணம் ஆகவில்லையே!” என்றாள்.

35 தூதன் மரியாளிடம், “பரிசுத்த ஆவியானவர் உன்னிடம் வருவார். உன்னதமான தேவனின் ஆற்றல் உன்னை மூடிக்கொள்ளும். குழந்தை பரிசுத்தமுள்ளதாக இருக்கும். அவர் தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படுவார். 36 உனது உறவினளாகிய எலிசபெத்தும் கருவுற்றிருக்கிறாள். அவள் மிகவும் வயதானவள். குழந்தை பெற முடியாதவள் என அவள் நினைக்கப்பட்டாள். ஆனால் ஒரு மகனைப் பெறப்போகிறாள். இது அவளுக்கு ஆறாவது மாதம். 37 தேவனால் எந்தக் காரியத்தையும் செய்ய முடியும்” என்றான்.

38 மரியாள், “நான் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும் பெண். நீங்கள் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். பின் தூதன் சென்றுவிட்டான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center