Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
லேவியராகமம் 7

குற்ற பரிகார பலிகள்

“குற்ற பரிகார பலியின் விதிகள் கீழ்க்கண்டவாறு உள்ளன. இது மிக பரிசுத்தமானது. தகன பலி கொல்லப்படும் இடத்திலேயே ஆசாரியன் குற்ற பரிகார பலியையும் கொல்ல வேண்டும். அதன் இரத்தத்தைப் பலிபீடத்தைச் சுற்றி ஆசாரியன் தெளிக்க வேண்டும்.

“ஆசாரியன் குற்ற பரிகார பலியின் கொழுப்பு முழுவதையும், செலுத்தவேண்டும். அவன் அதன் வாலையும் குடல்களை மூடியிருக்கிற கொழுப்பையும் அளிக்க வேண்டும். ஆசாரியன் இரண்டு சிறு நீரகங்களையும் அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பையும் எடுத்து அளிக்க வேண்டும். மேலும் கல்லீரலின் கொழுப்பு பகுதியையும் சிறு நீரகங்களோடு எடுத்து செலுத்த வேண்டும். இவற்றைப் பலிபீடத்தின்மேல் ஆசாரியன் எரிக்க வேண்டும். இது நெருப்பினால் கர்த்தருக்கென்று கொடுக்கும் காணிக்கையாகும். இது குற்ற பரிகார பலியாகும்.

“இக்குற்ற பரிகார பலியை ஆசாரியனின் குடும்பத்தில் உள்ள எந்த ஆண் மகனாயினும் உண்ணலாம். இது மிகவும் பரிசுத்தமானது. எனவே அது ஒரு பரிசுத்தமான இடத்தில் உண்ணப்பட வேண்டும். இக்குற்ற பரிகார பலியானது பாவப் பரிகார பலியைப் போன்றதாகும். இரண்டுக்கும் ஒரேவிதமான விதிமுறைகளே உள்ளன. எனவே பலியைக் கொடுத்த ஆசாரியனே அப்பலியின் இறைச்சியைப் பெறுவான். ஒருவனது தகன பலியைச் செலுத்திய ஆசாரியன் தான் செலுத்திய பலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளலாம். எல்லா தானியக் காணிக்கைகளும் அதை முன்னின்று வழங்கும் ஆசாரியனுக்கே உரியதாகும். அடுப்பில் சமைக்கப்பட்டதாகவோ, அல்லது சட்டியிலும், தட்டையான சட்டியிலும் சமைக்கப்பட்டதாகவோ இருக்கும் காணிக்கையானது ஆசாரியனுக்கே சேரும். 10 ஆரோனின் மகன்களுக்கு தானியக் காணிக்கைப் பொருள்கள் சேரும். அவை உலர்ந்ததா அல்லது எண்ணெயில் கலக்கப்பட்டதா என்பதைப் பொருட்படுத்தாமல், ஆரோனின் மகன்கள் அதனைப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும்.

சமாதானப் பலிகள்

11 “கர்த்தருக்குச் செலுத்துகிற சமாதானப் பலியின் சட்டங்கள் கீழ்க்கண்டவையாகும். 12 தன் நன்றியைத் தெரிவிப்பதற்காக ஒருவன் சமாதானப் பலியைக் கொண்டு வரலாம். அப்போது அவன் எண்ணெயிலே கலந்து பிசைந்த புளிப்பில்லாத அப்பத்தையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும், எண்ணெயிலே பிசைந்து வறுக்கப்பட்ட மிருதுவான மாவால் ஆன அப்பங்களையும் படைக்க வேண்டும். 13 ஒருவன் தேவனுக்குத் தன் நன்றியைத் தெரிவிக்கிற முறையே சமாதானப் பலியாகும். அந்தக் காணிக்கையோடு அவன் புளித்த மாவினாலான அப்பங்களையும் செலுத்த வேண்டும். 14 சமாதானப் பலியின் இரத்தத்தைத் தெளிக்கும் ஆசாரியனுக்கு இந்த அப்பங்களில் ஒன்று உரியதாகும். 15 சமாதானப் பலியின் இறைச்சியை வழங்கும் அதே நாளிலேயே உண்ண வேண்டும். தேவனுக்கு தன் நன்றியைச் செலுத்தும் வகையில் ஒருவன் சமாதானப் பலியை வழங்குகிறான். இறைச்சியில் சிறிதளவுகூட அடுத்த நாள் மீந்திருக்கக் கூடாது.

16 “தேவனுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க விரும்பும் ஒருவன் சமாதானப் பலியைக் கொண்டுவரலாம், அல்லது விசேஷ வாக்குறுதியை ஒருவன் தேவனுக்கு செய்திருக்கலாம். இது உண்மையானால், பின் அந்த பலியின் இறைச்சியை அவன் செலுத்திய அன்றே சாப்பிட வேண்டும். அதில் மீதியாக இருந்தால் அதனை அடுத்த நாளில் சாப்பிட வேண்டும். 17 ஆனால் பலியின் இறைச்சியானது மூன்றாம் நாளும் மிஞ்சுமானால், அதனை நெருப்பிலே சுட்டு எரித்துவிட வேண்டும். 18 எவனாவது மூன்றாம் நாளிலும் மிச்சமான சமாதானப் பலியின் இறைச்சியை உண்ணுவானேயானால் அவனைப்பற்றி கர்த்தர் மகிழ்ச்சியடையமாட்டார். கர்த்தர் அந்த பலியை அவனுக்குரியதாக ஏற்றுக்கொள்ளமாட்டார். அந்த பலி அசுத்தமானதாகும். அத்தகைய இறைச்சியை எவனாவது தின்றால் அதற்குரிய பாவத்திற்கு அவனே பொறுப்பாளியாவான்.

19 “அந்த இறைச்சியானது தீட்டான எப்பொருளின் மீதாவது பட்டால் அதனையும் ஜனங்கள் உண்ணக் கூடாது. அதனை நெருப்பில் எரித்துவிட வேண்டும். சமாதான பலிக்குரிய இறைச்சியைச் சுத்தமுள்ள எவனும் உண்ணலாம். 20 ஆனால் ஒருவன் கர்த்தருக்கு அசுத்தமானவனாக இருந்தும் சமாதான பலிக்குரிய இறைச்சியை உண்டுவிட்டால் அவன் அந்த ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட வேண்டும்.

21 “ஒருவன் தீட்டான ஒன்றைத் தொட்டுவிடலாம். அது மனிதர்களாலோ, தீட்டான மிருகங்களாலோ அல்லது தீட்டான வெறுக்கத்தக்கப் பொருளாலோ தீட்டாகியிருக்கலாம். ஒருவன் அதனைத் தொட்டதால் தீட்டாகிவிடுகிறான். அவன் கர்த்தருக்கு அசுத்தமானவனாக இருந்தும், சமாதானப் பலிக்குரிய இறைச்சியை உண்டால், பிறகு மற்ற ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட வேண்டும்” என்று சொன்னார்.

22 மேலும் கர்த்தர் மோசேயிடம், 23 “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீங்கள் பசு, வெள்ளாடு, ஆடு ஆகியற்றின் கொழுப்பை உண்ணக் கூடாது என்று கூறுங்கள். 24 தானாக இறந்த எந்த மிருகத்தின் கொழுப்பையும் நீங்கள் பயன்படுத்தலாம் அல்லது மற்ற மிருகங்களால் கொல்லப்பட்ட மிருகக் கொழுப்பையும் நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை ஒருபோதும் நீங்கள் உண்ணக் கூடாது. 25 எவனாவது கர்த்தருக்கு நெருப்பில் எரித்து அளித்த பலியின் இறைச்சியை உண்பானேயானால் அவன் தன் ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட வேண்டும்.

26 “நீங்கள் எங்கே வாழ்ந்தாலும் அங்கே எவரும் பறவைகளின் இரத்தத்தையோ அல்லது மிருகங்களின் இரத்தத்தையோ உண்ணக் கூடாது. 27 எவனாவது இரத்தத்தை உண்டால் அவன் தன் ஜனங்களிடம் இருந்து ஒதுக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

அசைவாட்டும் பலிக்கான விதிகள்

28 மேலும் கர்த்தர் மோசேயிடம், 29 “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறுங்கள்: ஒருவன் கர்த்தருக்கு சமாதானப் பலியைக் கொண்டு வரும்போது அதன் ஒரு பகுதியை கர்த்தருக்கு வழங்க வேண்டும். 30 அப்பகுதி நெருப்பில் எரிக்கப்பட வேண்டும். அவன் தன் கைகளால் அந்த பலிகளை எடுத்துக்கொண்டு வரவேண்டும். அவன் ஆசாரியனிடம் அம்மிருகத்தின் மார்புக்கண்டத்தையும், கொழுப்பையும் தர வேண்டும். அந்த மார்புக்கண்டத்தை கர்த்தருக்கு முன்னால் மேலே தூக்கிப்பிடிக்க வேண்டும். இதுவே அசைவாட்டும் பலியாகும். 31 பிறகு ஆசாரியன் அந்தக் கொழுப்பை பலிபீடத்தில் எரிக்க வேண்டும். ஆனால் மார்புக்கண்டம் ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் உரியதாகும். 32 நீங்கள் அம்மிருகத்தின் வலது தொடையை சமாதானப் பலியிலிருந்து எடுத்து ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். 33 சமாதானப் பலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிற ஆரோனின் குமாரனாகிய ஆசாரியனுக்கு வலது முன்னந் தொடை பங்காகச் சேரும். 34 (கர்த்தராகிய) நான் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து சமாதானப் பலிகளிலிருந்து வலது தொடையையும், அசைவாட்டும் பலியின் மார்க்கண்டத்தையும் எடுத்துக்கொள்வேன். நான் அவற்றை ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் கொடுக்கிறேன். இஸ்ரவேலின் ஜனங்கள் இந்த விதிக்கு என்றென்றும் கீழ்ப்படிய வேண்டும்” என்று கூறினார்.

35 எரிக்கப்பட்ட காணிக்கை மூலமாகக் கிடைத்த இப்பாகங்கள் ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் கொடுக்கப்படும். ஆரோனும் அவனது மகன்களும் கர்த்தருக்கு ஊழியம் செய்யுமளவும் அவர்கள் தங்களுக்குரிய பலிகளின் பங்கைப் பெறுவார்கள். 36 அவர்களை ஆசாரியர்களாகத் தேர்ந்தெடுத்த காலத்திலேயே கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களிடம் ஆசாரியர்களுக்குரிய பங்கை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார். அந்த ஜனங்கள் அப்பங்கை அவர்களுக்கு எப்பொழுதும் கொடுக்க வேண்டும்.

37 இவையே தகன பலிகளுக்கும், தானிய பலிகளுக்கும், குற்றபரிகார பலிகளுக்கும், பாவப் பரிகார பலிகளுக்கும், சமாதானப் பலிகளுக்கும், ஆசாரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் உரிய சட்டங்களாகும். 38 கர்த்தர் இச்சட்டங்களை மோசேக்கு சீனாய் மலையில் கொடுத்தார். கர்த்தர் அச்சட்டங்களை, இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பலிகளை சீனாய் வனாந்தரத்துக்கே கொண்டு வந்து செலுத்தும்படி கட்டளையிட்ட அந்த நாளிலேயே கொடுத்தார்.

சங்கீதம் 7-8

கர்த்தரை நோக்கி தாவீது பாடிய பாடல், பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்த கீசின் மகனாகிய சவுலைப்பற்றியது இந்தப் பாடல்

எனது தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன்.
    என்னைத் துரத்தும் மனிதரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    என்னை மீட்டுக்கொள்ளும்!
நீர் எனக்கு உதவாவிட்டால், சிங்கத்தால் பிடிக்கப்பட்ட மிருகத்தைப் போலாவேன்.
    என்னைக் கவர்ந்து செல்கையில் யாரும் என்னைக் காப்பாற்ற இயலாது!

எனது தேவனாகிய கர்த்தாவே, நான் தவறு ஒன்றும் செய்யவில்லை.
    நான் தவறிழைக்கவில்லையென்று உறுதியளிக்கிறேன்!
என் நண்பர்களுக்கு நான் தீங்கேதும் செய்யவில்லை.
    என் நண்பர்களின் பகைவர்க்கு உதவவுமில்லை.
ஆனால் ஒரு பகைவன் என்னைத் துரத்துகிறான்.
    அவன் என்னைக் கொல்ல ஆவலாயிருக்கிறான்.
அவன் என் ஜீவனைத் தரையில் வீழ்த்தி நசுக்க விரும்பி அழுக்குக்குள் என் ஆத்துமாவை அழுத்துகிறான்.

கர்த்தாவே எழுந்து உமது கோபத்தைக் காட்டும்!
    என் பகைவன் கோபங்கொண்டிருக்கிறான், எழுந்து அவனோடு போர் புரியம்.
    கர்த்தாவே, எழுந்து நீதி செய்யும்.
கர்த்தாவே, ஜனங்களை நியாயந்தீரும்.
    உம்மைச் சுற்றிலும் தேசங்களை ஒன்று சேரும்.
கர்த்தாவே எனக்கு நியாயம் வழங்கும்.
    எனது நேர்மையையும், நான் களங்கமற்றவன் என்பதையும் நிரூபியும்.
தீயோரைத் தண்டியும், நல்லோருக்கு உதவும்.
    தேவனே, நீர் நல்லவர்.
    நீர் ஜனங்களின் இருதயங்களைப் பார்க்க வல்லவர்.

10 நேர்மையான இருதயம் கொண்ட ஜனங்களுக்கு தேவன் உதவுகிறார்.
    தேவன் என்னைப் பாதுகாப்பார்.
11 தேவன் ஒரு நல்ல நீதிபதி,
    எந்நேரமும் அவர் தீமைக்கு எதிராக தன் கோபத்தைக் காட்டுவார்.
12 தேவன் ஒரு முடிவெடுத்தால் அவர் அதிலிருந்து மாறுவதில்லை.
13 தீய ஜனங்களைத் தண்டிக்க தேவன் ஆயத்தமாயிருக்கிறார். [a]

14 சில ஜனங்கள் எப்போதும் தீயவற்றைத் திட்டமிடுவார்கள்.
    அவர்கள் இரகசியமாய் திட்டமிடுவார்கள், பொய்யுரைப்பார்கள்.
15 அவர்கள் பிறரை வலைக்குட்படுத்தித் துன்புறுத்த முயல்வார்கள்.
    ஆனால் தங்கள் வலைகளில் தாங்களே சிக்கித் துன்புறுவார்கள்.
16 அவர்கள் தங்களுக்கான தண்டனையைப் பெறுவார்கள்.
    அவர்கள் பிறரிடம் கொடுமையாய் நடந்துகொண்டனர்.
    ஆனால் அவர்களுக்குத் தகுதியானதைப் பெறுவார்கள்.

17 கர்த்தர் நல்லவராயிருப்பதால் அவரைத் துதிப்பேன்.
    மகா உன்னதமான கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பேன்.

கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் சங்கீதம்

எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் பூமியின் எல்லா இடத்திலும் மிகுந்த அற்புதமானது!
    விண்ணுலகிலும் உமது நாமம் உமக்குத் துதிகளைக் கொண்டு வருகிறது.

பிள்ளைகள், குழந்தைகள் வாயிலுமிருந்து உம்மைத் துதிக்கும் பாடல்கள் வெளிப்படும்.
    உம் பகைவரை அமைதிப்படுத்த இவ்வல்லமையான பாடல்களைக் கொடுத்தீர்.

கர்த்தாவே, உமது கைகளால் நீர் செய்த வானங்களை நான் கண்டேன்.
    நீர் படைத்த நிலாவையும், நட்சத்திரங்களையும் நான் கண்டு ஆச்சரியமடைந்தேன்.
ஏன் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்?
    ஏன் அவர்களை நீர் நினைவுகூருகிறீர்?
    ஏன் அவர்களைக் கவனிக்கிறீர்?

ஆனால் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்!
    அவர்களை ஏறக்குறைய தேவர்களைப் போலவே உண்டாக்கினீர்.
    மனிதரை மகிமையாலும், மேன்மையாலும் முடிசூட்டினீர்.
நீர் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவர்களை அதிகாரிகளாக வைத்தீர்.
ஆடுகள்,பசுக்கள், காட்டு மிருகங்கள் அனைத்தையும் மனிதர்கள் ஆண்டனர்.
வானத்துப் பறவைகளையும்
    சமுத்திரத்தில் நீந்தும் மீன்களையும் அவர்கள் ஆண்டனர்.
எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் உலகத்தில் எங்கும் மிகவும் மிகவும் அற்புதமானது!

நீதிமொழிகள் 22

22 ஒருவன் செல்வந்தனாக இருப்பதைவிட மரியாதைக்குரியவனாக வாழ்வது நல்லது. பொன் மற்றும் வெள்ளியைவிட நல்ல பெயர் முக்கியமானது.

செல்வந்தராக இருப்பினும் ஏழைகளாக இருப்பினும் எல்லாரும் சமமே. அனைவரையும் கர்த்தரே படைத்துள்ளார்.

அறிவுள்ளவர்கள் துன்பம் வருவதைப் பார்த்து அதிலிருந்து விலகிக்கொள்வார்கள். ஆனால் அறிவற்றவர்களோ நேராகத் துன்பத்தை நோக்கிப் போய் அதில் சிக்கிக்கொள்வார்கள்.

கர்த்தரை மதித்துப் பணிவுள்ளவர்களாக இருங்கள். அப்போது உங்களுக்குச் செல்வமும் மதிப்பும் உண்மையான வாழ்வும் கிடைக்கும்.

தீயவர்கள் பல துன்பங்களில் அகப்பட்டுக்கொள்கிறார்கள். ஆனால் தங்கள் ஆத்துமாவைப்பற்றி எச்சரிக்கையாக இருப்பவர்கள் துன்பங்களிலிருந்து விலகி வாழ்கின்றனர்.

ஒரு பிள்ளை இளமையாக இருக்கும்போதே வாழ்வதற்கான நல்ல வழிகளை அவனுக்குப் போதியுங்கள். அப்போது அவன் வளர்ந்தபிறகும் தொடர்ந்து நல்ல வழியிலேயே நடப்பான்.

ஏழைகள் எல்லாம் செல்வந்தர்களுக்கு அடிமையாக இருக்கின்றனர். கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனுக்கு வேலைக்காரனாக இருக்கிறான்.

துன்பத்தை விதைக்கிறவன் துன்பத்தையே அறுக்கிறான். முடிவில் அடுத்தவர்களுக்கு கொடுத்த துன்பத்தாலேயே அவன் அழிந்துபோகிறான்.

தாராளமாகக்கொடுப்பவன் ஆசீர்வதிக்கப்படுகிறான். தன் உணவை ஏழைகளோடு பகிர்ந்துகொள்வதால் அவன் ஆசீர்வதிக்கப்படுகிறான்.

10 ஒருவன் மற்றவர்களைவிடத் தன்னைப் பெரிதாக நினைத்துக்கொண்டிருந்தால் அவனை விலகும்படி வற்புறுத்து. அவன் விலகும்போது அவனோடு துன்பங்களும் விலகுகின்றன. பின் வாதங்களும் விரோதமும் விலகும்.

11 நீ சுத்தமான இருதயத்தையும் கருணைமிக்க வார்த்தைகளையும் விரும்புகிறவனாயிருந்தால் அரசனும் உனக்கு நண்பன் ஆவான்.

12 தேவனை அறிகின்ற ஜனங்களை கர்த்தர் கவனித்து காப்பாற்றுகிறார். ஆனால் தனக்கு எதிரானவர்களை அவர் அழித்துப்போடுகிறார்.

13 சோம்பேறியோ, “என்னால் வேலைக்குப் போகமுடியாது. வெளியே ஒரு சிங்கம் உள்ளது. அது என்னைக்கொன்றுவிடும்” என்று கூறுகிறான்.

14 விபச்சாரம் என்பது வலைபோன்றது. இவ்வலையில் விழுபவர்களின் மீது கர்த்தர் மிகுந்த கோபங்கொள்கிறார்.

15 சிறுவர்கள் முட்டாள்தனமான செயல்களைச் செய்கிறார்கள். நீ அவர்களைத் தண்டித்தால் அவற்றைச் செய்யாமல் இருக்கக் கற்றுக்கொள்கிறார்கள்.

16 நீ செல்வந்தனாகும்பொருட்டு ஏழைகளைத் துன்புறுத்துவதும், செல்வந்தர்களுக்கு அன்பளிப்புகளைக்கொடுப்பதும் ஆகிய இரண்டு செயல்களும் உன்னை ஏழையாக்கும்.

முப்பது ஞானமொழிகள்

17 நான் சொல்லுகிறதைக் கவனியுங்கள். அறிவாளிகள் சொல்லியிருக்கின்றவற்றை நான் உங்களுக்குப் போதிக்கிறேன். இப்போதனைகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். 18 நீ இவற்றை நினைவில் வைத்திருந்தால் இது உனக்கு நல்லது. நீ இவ்வார்த்தைகளைச் சொன்னால் இவை உனக்கு உதவியாக இருக்கும். 19 இப்பொழுது இவற்றை நான் உனக்கு போதிக்கிறேன். நீ கர்த்தரை நம்ப வேண்டுமென்று நான் விரும்புகிறேன். 20 நான் உனக்காக முப்பது அறிவுரைகளை எழுதியிருக்கிறேன். இவை அறிவும் ஞானமும் உடையவை. 21 இவை உனக்கு உண்மையானவற்றையும் முக்கியமானவற்றையும் போதிக்கும். அப்போது உன்னை அனுப்பியவருக்கு நீ நல்ல பதில்களைக் கூறமுடியும்.

— 1 —

22 ஏழைகளிடமிருந்து திருடுவது எளிது. ஆனால் அதனைச் செய்யாதே. வழக்கு மன்றத்தில் ஏழைகளைச் சுரண்டாதே. 23 கர்த்தர் அவர்கள் பக்கம் இருக்கிறார். அவர்களுக்கு அவர் உதவுகிறார். அவர்களிடமிருந்து எடுத்துக்கொண்ட எந்தப் பொருளையும் அவர் திரும்ப எடுத்துக்கொள்கிறார்.

— 2 —

24 மிக சீக்கிரத்தில் கோபங்கொள்கிறவர்களோடு நட்புகொள்ளாதே. விரைவில் நிதானம் இழப்பவர்கள் பக்கத்தில் போகாதே. 25 நீ அவ்வாறு செய்தால், நீயும் அவர்களைப்போன்று ஆகக் கற்றுக்கொள்வாய். பிறகு அவர்களுக்குரிய அதே துன்பம் உனக்கும் வரும்.

— 3 —

26 அடுத்தவன் பட்ட கடனுக்குப் பொறுப்பேற்பதாக நீ வாக்குறுதி தராதே. 27 உன்னால் அந்தக் கடனைத் தீர்க்க முடியாவிட்டால், உன்னிடமுள்ள அனைத்தையும் இழந்துபோவாய். நீ தூங்கும் படுக்கையை எதற்காக இழக்கவேண்டும்?

— 4 —

28 உன் முற்பிதாக்களால் குறிக்கப்பட்ட பழைய எல்லை அடையாளங்களை மாற்றாதே.

— 5 —

29 ஒருவன் தனது வேலையில் திறமையுடையவனாக இருந்தால் அவன் அரசனிடம் பணியாற்றும் தகுதியைப் பெறுகிறான். அவன், முக்கியமில்லாதவர்களுக்குப் பணியாற்றும் தேவை இருக்காது.

1 தெசலோனிக்கேயர் 1

பவுலும், சில்வானும், தீமோத்தேயும் பிதாவாகிய தேவனுக்குள்ளும் இயேசு கிறிஸ்துவாகிய கர்த்தருக்குள்ளும் இருக்கும் தெசலோனிக்கேயாவில் உள்ள சபையோருக்கு எழுதுவது. தேவனுடைய கிருபையும் சமாதானமும் உங்களோடு இருப்பதாக.

வாழ்வும் விசுவாசமும்

நாங்கள் பிரார்த்தனை செய்யும்பொழுதெல்லாம் உங்களை நினைவுகூருகிறோம். உங்கள் அனைவருக்காவும் தொடர்ந்து தேவனிடம் நன்றி கூறுகிறோம். பிதாவாகிய தேவனிடம் பிரார்த்தனை செய்யும்பொழுதெல்லாம் விசுவாசத்தினாலும், அன்பினாலும் நீங்கள் செய்தவற்றுக்காகவும் அவருக்கு நன்றி செலுத்துகிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையில் நீங்கள் உறுதியுடன் இருப்பதற்காக நாங்கள் அவருக்கு நன்றி செலுத்துகிறோம்.

சகோதர சகோதரிகளே, தேவன் உங்களிடம் அன்பாய் இருக்கிறார். அவர் உங்களைத் தமக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று நாங்கள் அறிவோம். உங்களிடம் நற்செய்தியைக் கொண்டு வந்தோம். ஆனால் நாங்கள் வார்த்தையை மட்டும் பயன்படுத்தவில்லை, அதிகாரத்தையும் பயன்படுத்தினோம். பரிசுத்த ஆவியானவரோடும் முழு உறுதியோடும் நாங்கள் அதைக் கொண்டு வந்தோம். உங்களோடு நாங்கள் இருந்தபோது எப்படி வாழ்ந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு உதவும் வகையிலேயே வாழ்ந்தோம். நீங்கள் எங்களைப் போலவும், கர்த்தரைப் போலவும் ஆனீர்கள். நீங்கள் மிகவும் துன்புற்றீர்கள், எனினும் மகிழ்ச்சியோடு போதனைகளை ஏற்றுக்கொண்டீர்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு அந்த மகிழ்ச்சியைத் தந்தார்.

மக்கதோனியா, அகாயா ஆகிய நகரங்களில் உள்ள விசுவாசிகளுக்கு நீங்கள் எடுத்துக்காட்டு ஆனீர்கள். உங்கள் மூலம் மக்கதோனியாவிலும், அகாயாவிலும் தேவனுடைய போதனை பரவியது. தேவனுடைய பேரில் உள்ள உங்கள் விசுவாசம் எல்லா இடங்களுக்கும் தெரிய வந்தது. எனவே உங்கள் விசுவாசத்தைப் பற்றி நாங்கள் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் எங்களை ஏற்றுக்கொண்ட நல்வழியைப் பற்றி எல்லா இடத்திலும் இருக்கிற மக்கள் கூறுகிறார்கள். நீங்கள் எப்படி உருவ வழிப்பாட்டை நிறுத்தினீர்கள் என்பதையும், உண்மையான, ஜீவனுள்ள தேவனுக்கு சேவை செய்யும் மாற்றத்தைப் பெற்றீர்கள் என்பதையும் கூறுகிறார்கள். 10 உருவ வழிபாட்டை நிறுத்திவிட்டு பரலோகத்திலிருந்து வரப்போகும் தேவனுடைய குமாரனுக்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள். தேவன் தன் குமாரனை மரணத்திலிருந்து உயிர்த்தெழச் செய்தார். இயேசுவாகிய அவரே, நியாயத்தீர்ப்பு அளிக்கப்போகும் தேவனுடைய கோபத்திலிருந்து நம்மை இரட்சிக்கிறவர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center